ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி- சென்னை காவல் ஆணையர்
- குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
- புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல் தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது.
குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
இது தெரியாமல் சிலர் முதல் தகவல் அறிக்கையை இப்படி போட்டிருக்கலாம், அப்படி போட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.
இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது, அது தவறு தான்.
எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது. எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் டவுன்லோடு செய்து பரப்பி இருக்கலாம்.
இதுவரை ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் மீது 2019க்கு பின் எந்த வழக்கும் பதிவாகவில்லை.
இதுவரை வேறு பெண்களிடம் இருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது.
பெண் புகார் கொடுத்த அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி.
காவல்துறை நடுநிலையுடன், கட்சி வேறுபாடு கடந்து நடந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையை நம்பி மாணவி புகார் அளித்தார். அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.