தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளிகளின் கட்டிடங்களை தரமானதாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2025-07-23 09:44 IST   |   Update On 2025-07-23 09:44:00 IST
  • பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு அரசுப் பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த செலவு செய்ய வேண்டுமே தவிர பள்ளிக்கட்டிடங்கள் தரமற்றதாக இருக்க செலவு செய்யக்கூடாது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ந்தேதி அன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் விடுப்பில் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கவில்லை. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கெல்லாம் அரசு பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டிடங்கள் கட்ட செலவிடப்பட்டதோ அதெல்லாம் முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்து, அனைத்து அரசுப்பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அவ்வப்போதே எடுத்து அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளை தேடி வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News