பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்- ஜி.கே.வாசன்
- சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
- தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.