விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
- இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
- 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.
இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.