தமிழ்நாடு செய்திகள்

முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலம்: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழ்நாடு

Published On 2026-01-04 07:49 IST   |   Update On 2026-01-04 07:49:00 IST
  • 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது.
  • பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.

சென்னை:

ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவி, எழுத்தறிவு. மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் 100 சதவீதம் எழுத்தறிவு பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 95 சதவீதத்தை தாண்டினாலே அது முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மிகவும் வயதானவர்கள், தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களால் எழுத்தறிவை பெற முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை 2027-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் எட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு திட்டங்களை வகுக்கிறது.

இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவும், நிதிசார் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வும் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

மத்திய அரசு 2027-ல் இலக்கை நிர்ணயித்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த நிலையை கடந்த ஆண்டிலேயே (2025) அடைந்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் முறையாக இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த ஒப்புதலுக்காகவும், அந்த ஒப்புதல் அளித்ததும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஆவலோடு காத்திருக்கிறது.

95 சதவீதத்தை தாண்டுவது மட்டுமல்லாமல், முடிந்த வரை 100 சதவீதத்தை எப்படியாவது நெருங்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு அரசும் எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அதன் மூலம் தேர்வை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடந்தது. ஜூனில் நடந்த தேர்வை 5 லட்சத்து 38 ஆயிரத்து 29 பேரும், டிசம்பரில் நடந்த தேர்வை 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 பேரும் என மொத்தம் 15 லட்சத்து ஆயிரத்து 38 பேர் எழுதியுள்ளனர். இதன் தேர்ச்சியும், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற அறிவிப்பும் ஒருசேர வரும் சூழல் இருக்கிறது.

அப்படி அறிவிப்பு வந்தால், முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெறும். இதற்கு முன்பு மிசோரம், கோவா, திரிபுரா, இமாசல பிரதேசம், லடாக் ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.

இவைகள் எல்லாவற்றிலும் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. இந்த மாநிலங்களின் மக்கள் தொகையைவிட பல மடங்கு அதிகம் கொண்டவையாக தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் பெரிய மாநிலங்களில் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 'தமிழ்நாடு' பெயர் பெறப்போகிறது.

கேரளாவை பொறுத்தவரையில், 1991-ம் ஆண்டிலேயே யுனெஸ்கோ அமைப்பால் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News