தமிழ்நாடு செய்திகள்

காரைபள்ளம் அருகே குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2025-05-17 17:00 IST   |   Update On 2025-05-17 17:00:00 IST
  • யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
  • காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.

கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News