தொடர் மழை காரணமாக காயல்பட்டினத்தில் 500 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்- பொதுமக்கள் அவதி
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.