குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை
- மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். எனினும் பலரும் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நின்று தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குளங்களுக்கு செல்லும் கால்வாய்களில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தென்காசி குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.