முக்கூடல் அருகே தொழிலாளி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கும்பல் கைது
- கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஆறுமுக செல்வம். இவரது நண்பர் மாரியப்பன்(வயது 25). இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆறுமுக செல்வம் வீட்டின்மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவில் கொடை விழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் பிடியில் சிக்கியவர்கள் மாரியப்பன், அவரது கூட்டாளிகள் மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த கொம்பையா, பாலசங்கு, வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியை சேர்ந்த வேல்சாமி பாண்டியன், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அந்த கும்பல் ஆறுமுக செல்வத்தை தீர்த்துக்கட்டுவதற்காக சம்பவத்தன்று அரிவாளுடன் அங்கு வந்ததும், வீட்டின் வெளியே அவர் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தகராறில் ஆறுமுக செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாரியப்பன் தரப்பினரை பாட்டிலால் தாக்கி உள்ளனர். அப்போது அந்த கைகலப்பு தொடர்பாக போலீசில் புகார் அளிக்க ஆழ்வார்குறிச்சி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாரியப்பன் தரப்பினர் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
இதனால் அவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று போலீசார் சந்தேகித்த நிலையில், அன்றைய தினம் இரவிலேயே அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.