பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் கைது
- பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
- அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அண்மை காலமாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி அதிரடியாக ஆய்வு நடத்தி விதிகளை முறையாக பின்பற்றாத ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில காரியாபட்டி அருகே இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது வடகரை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று பல்வேறு கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு காரியாபட்டியை அடுத்த தண்டியனேந்தல், கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு கிளைகளை கொண்டுள்ள இந்த ஆலை நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த ஆலையில் சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் தண்டியனேந்தல், கல்குறிச்சியை சேர்ந்த 5 தொழிலாளர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் இருந்தனர். அப்போது அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த அறை அடையாளம் காண முடியாத அளவுக்கு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 35), கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (53) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பேச்சியம்மாள் (43), கணேசன் (53) மற்றும் முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காரியாபட்டி உள்ளிட்ட அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து மருந்துகள் வெடித்த வண்ணம் இருந்தன. பின்னர் அதிக வேகத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகே பலியானவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தை அறிந்த அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.