தமிழ்நாடு செய்திகள்

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published On 2025-12-03 21:10 IST   |   Update On 2025-12-03 21:10:00 IST
  • தொடர்மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
  • உரிமையாளர்களின் வசதிக்காக, மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News