தமிழ்நாடு செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு வயிற்று வலிக்கு ஆஸ்பத்திரிக்கு சென்ற என்ஜின் டிரைவர்

Published On 2024-12-20 11:59 IST   |   Update On 2024-12-20 11:59:00 IST
  • யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
  • பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.

திருவள்ளூர்:

திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.

ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.

இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.

பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.

பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.

Tags:    

Similar News