கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை சீரமைக்கும் பணிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளை மறுநாளும், பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரை இன்று காலை 10 மணி வரை புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதையடுத்து இடைப்பட்ட நேரங்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையம் வரை மட்டுமே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் பயணிகள் பொன்னேரி வரை பஸ்சில் வந்து, அதன் பின்னர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். இதனால் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்களில் ஏறி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.