தம்பதிகளிடம் போலீசார் விசாரித்து விபரங்களை சேகரித்து, விழிப்புணர்வு.
தம்பதி கொலை எதிரொலி: தோட்டத்து வீடுகளில் போலீசார் சோதனை
- பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
- சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிணத்துக்கடவு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஆண்டு தோட்டத்து வீட்டில் வசித்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மர்ம கும்பால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், சிவகிரியிலும் தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தோட்டத்து வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு சிவகுமார் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, மதிவண்ணன் தலைமையிலான போலீசார், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் தனியாக உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகின்றனரா? என கண்காணித்தனர். மேலும் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விவரம், வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்துவது, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வது, வீடுகளில் நாய் வளர்க்க வேண்டும், சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் கதவில் அலாரம் பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினர். அத்துடன் போலீஸ் நிலைய எண்ணை கொடுத்து, ஏதாவது தகவல் இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமும் 10க்கும் மேற்பட்ட போலீசார் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள 47 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பண்ணை வீடுகளை கண்காணித்து, அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய போலீசார் அங்குள்ள தோட்டத்து வீடுகளுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
குறிப்பாக முதிய தம்பதிகளிடம் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சந்தேகப்படும் படியான சத்தம் கேட்டால் உடனே கதவை திறந்து வெளியே வரவேண்டாம். அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது, எச்சரிக்கையாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:-
குற்ற சம்பவங்களை தடுக்க தோட்டத்து வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கதவுகளில் எச்சரிக்கை அலாரம் வைக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.