தமிழ்நாடு செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-07-23 11:06 IST   |   Update On 2025-07-23 11:06:00 IST
  • டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
  • லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரல் ஆனது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்டு செய்யப்படுவேன் என்று தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்ததையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News