போதைப்பொருள் விவகாரம்: முன்னணி நடிகர் முதல் இளம் இசையமைப்பாளர் வரை நீளும் பட்டியல்
- கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
- திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மூன்றெழுத்தில் பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர், தான் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் கொகைன் போதைப்பொருளை வழங்குவாராம். அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் கூட கொகைனுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இளம் இசையமைப்பாளர் ஒருவர் கொகைன் இல்லாமல் இரவில் தூங்கமாட்டாராம். கொகைன் உறிஞ்சினால் தான் அவருக்கு இசைஞானம் பொங்கி வருமாம்.
போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இவர்களும் கொண்டுவரப்பட இருக்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.