தமிழ்நாடு செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது: எடப்பாடி பழனிசாமி

Published On 2025-08-11 19:36 IST   |   Update On 2025-08-11 19:36:00 IST
  • இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம்.
  • மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

இன்று மாலை வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை பின் வருமாறு:-

ராயக்கோட்டை பகுதி ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சியே தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை. விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இங்கு மலர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்கள், காய்கறிகளும் அதிகம் உற்பத்தியாகிறது.

இந்த தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம். மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம். பெங்களூரு சென்று விற்கும் அவல நிலையை மாற்றி இங்கேயே நல்ல விலை கிடைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அந்த மையம் அப்படியே பூட்டிக்கிடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சர்வதேச ஏல மையம் திறக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும், ஒரு கிலோ மாம்பழம் 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags:    

Similar News