கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி தினமாக கொண்டாடுவோம் - தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
- தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து புதிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் தி.மு.க.வுக்கு மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கப்படும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கல்வியாளர்களுக்கு என்று ஒரு அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு அணியும் என 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 2 புதிய அணிகள் அறிமுகத்துக்கு தி.மு.க. பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க.வில் ஏற்கனவே 23 அணிகள் உள்ளன. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 புதிய அணிகளையும் சேர்த்து தி.மு.க. அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என்றும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.