டிரம்ப், புதினுடனும் நான் நெருக்கமாக உள்ளேன்: கோர்ட்டில் ஆஜரான சீமான் பேட்டி
- இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் கோர்ட்டு எண் 4-ல் நடந்து வருகிறது.
- நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
திருச்சி:
திருச்சி சரக டி.ஜ.ஜி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் கோர்ட்டு எண் 4-ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக 7-ம் தேதி சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் அதற்கான நோட்டீசை பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. வருண்குமார் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சீமான் ஆஜராகவில்லை என்றால் அவர்மீது ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே சீமான் 8-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் 8-ம் தேதி காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் இன்று காலை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், அண்ணாமலை எனக்கு நண்பர். அண்ணாமலை இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவைப் பார்க்கிறேன். நான் டிரம்ப் மற்றும் புதினோடும் நெருக்கமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.