சபரிமலையில் நாணயங்களை நிறைபடி காணிக்கையாக வழங்க தேவசம் போர்டு அனுமதி
- மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
- மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.
கூடலூர்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினந்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்களில் தினமும் 15 ஆயிரம் பேர் வருவதில்லை. இதனால் நேரடியாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இதற்காக சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மரக்கால் போன்ற பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நெல், அரிசி, சர்க்கரை, மஞ்சள், பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதில் நிரப்பி காணிக்கையாக தருகின்றனர். மண்டல கால வழிபாடு தொடங்கியதில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற காணிக்கையை அளித்துள்ளனர்.
இனிமேல் சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் பலரும் நெல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கலனில் நிறைத்து காணிக்கையாக தருகின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தை பொறுத்தவரையில் நெல் மட்டுமின்றி நாணயங்களையும் இனிமேல் நிறைபடி காணிக்கையாக வழங்கலாம். மாளிகைபுரத்தம்மன் கோவிலில் வழக்கம் போல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கலாம்.
இதற்காக காலை 3.30 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.15 மணி வரையிலும் மாளிகைபுரத்தில் காலை 3 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இந்த காணிக்கையை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.