தமிழ்நாடு செய்திகள்

திருவிழாவில் கொடுத்த குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது- அமைச்சர் விளக்கம்

Published On 2025-04-21 13:42 IST   |   Update On 2025-04-21 13:42:00 IST
  • குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை சரி செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேசியதாவது:-

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதி மண்டலம் 5ன் கீழ் வரும் 10வது வார்டில் மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு, நெசவாளர் தெரு, காமாட்சியம்மன் தெரு, காளையன் தெரு, லிங்கநகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்துள்ளது.

கழிவு நீர் கலந்த குடிநீரை உபயோகித்த மின்னப்பன் தெருவில் வசித்து வரும் முரளியின் 4 வயது குழந்தை பிரியங்கா மற்றும் அதே தெருவில் வசித்து வரும் அங்குசாமி மனைவி மருதாம்பாள்(75) மற்றும் மேல மின்னப்பன் தெருவில் வசித்து வரும் கோவிந்தராஜன் மனைவி லதா (52), சுப்பிரமணியன் (54) ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில், கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 5 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை சரி செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதி மக்கள் இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்தவுடன், அப்பகுதிக்குச் சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது கோடை காலம். மக்கள் குடிநீரை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலை இருப்பதால், அரசு தமிழ்நாடு முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க அறிவுறுத்த வேண்டும்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ கட்டணத்தை அரசே வழங்கவும், இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் அரசு உரிய கவனம் செலுத்த வலியுறுத்தி அமைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் இதன் மீது பேசினார்கள்.

இறுதியாக இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் கிடைத்தவுடன் உடனடியாக அப்பகுதியில் 287 பேர் கொண்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கியது.

10 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

அப்பகுதியில் வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு விநியோகிக்கப்படும் நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் மூலமாகவே குழந்தை உட்பட 4 பேருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையிலும் அவை தெளிவாகியிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு 5½ கோடி மக்களுக்கு 4 ஆயிரம் எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

எனவே திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது அல்ல. அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானங்களால் நிகழ்ந்தது.

இவ்வாறு அமைச்சர் கே.என் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags:    

Similar News