நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
- டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நாளை மாலை நெருங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நாளை மாலை நெருங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.