நெருங்கி வரும் டிட்வா புயல் - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
- திருவள்ளூர், ராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.