மகளின் காதல் திருமணத்தால் வழக்குப்பதிவு? - ரெயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை
- பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
- ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50). இவரது மனைவி கவிதா.
தம்பதியின் 17 வயதுடைய மகள் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சிறுமிக்கு வாலிபருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாலிபரின் பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குமார், கவிதா இருவரும் திருப்பத்தூருக்கு வந்தனர்.
மொளகாரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றனர். விரக்தி அடைந்த தம்பதியினர் ரெயில் தண்டவாளத்தில் நின்றனர். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் குமார், கவிதா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.