தமிழ்நாடு செய்திகள்

செல்வப்பெருந்தகை பற்றி அவதூறு பேச்சு: இ.பி.எஸ்.-ஐ கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2025-09-25 15:32 IST   |   Update On 2025-09-25 15:32:00 IST
  • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
  • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News