கோவையில் இன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி - கலெக்டர் பார்வையிட்டார்
- கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.