மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
- நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணிக்கு திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். அவரை அரசு அதிகாரிகளும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் 3 நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22-ந்தேதி) அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 15-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.
நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.