தருமபுரியில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தருமபுரி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் நாளை 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக தருமபுரிக்கு 8 மணிக்கு வருகிறார்.
அவருக்கு தொப்பூர், பாளையம் சுங்கசாவடி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவர் 8.15 மணிக்கு அதியமான் கோட்டை மேம்பாலம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
இதையடுத்து நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கட்சி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து அவர் 9 மணிக்கு ஒட்டப்பட்டியில் முரசொலி மாறன் 92-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் 9.30 மணிக்கு அதியமான் கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி பி.எம்.பி. கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.512.52 கோடி மதிப்புள்ள 1,044 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.362.77 கோடி மதிப்புள்ள 1,073 முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் திறந்து வைக்கிறார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70.427 பயனாளிகளுக்கு ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும், தருமபுரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் தி.மு.க., கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதலமைச்சர் வருகையையொட்டி, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மேற்பார்வையில் தருமபுரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் 1,606 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.