இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூரில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
- பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணத்தை பெற்றக்கொண்ட மக்கள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூர் கண்டோன் மென்ட் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை வழங்கிய போது அவருக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தை பெற்றவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.