நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நிதி ஆயோக்கின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
- டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்பட பல்வேறு நோக்கங்களுக்காக நிதி ஆயோக் அமைப்பு 2015-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜ.க. அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.
டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23-ந்தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.