அண்ணா அறிவாலயத்தில் நாளை விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்கிறார்
- தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
- கலைஞர் அரங்கம் சென்று ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 72-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்டு அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு அறிவாலயத்தில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்.
அதன் பிறகு அங்குள்ள கலைஞர் அரங்கம் சென்று ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் அறிவாலயம் வருவார்கள் என்பதால் கலைஞர் அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரையும் அங்கு சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.
நிர்வாகிகள் ஏராளமான பிறந்தநாள் பரிசு பொருட்கள் சால்வைகள், புத்தகங்கள், பழங்கள் வழங்குவார்கள் என்பதால் அவற்றை வாங்கி வைப்பதற்கும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொண்டர்களிடம் வாழ்த்து பெற்ற பிறகு கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெறுகிறார். சி.ஐ.டி. காலணி இல்லத்திற்கும் சென்று ராஜாத்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
அதன் பிறகு மாலையில் கொட்டிவாக்கத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷம் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற நாள் முதல், மக்கள் நலனில் பெரிதும் நாட்டங்கொண்டு 'நான் முதல்வன்' 'பசுமைத் தமிழ்நாடு இயக்கம்' 'புதுமைப் பெண்' 'காலை சிற்றுண்டித் திட்டம்' முதலிய பல்வேறு திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல்படுத்தி வரும் முதல்வரின் பணிகள் யாவும் மேலும் சிறக்க வாழ்த்துவதுடன், தமது வாழ்வில் அவர் பன்னலம் துய்த்து, பல்வளம் பெருக்கிப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்கவெனவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.