வக்கீல் தொழிலில் அதிக பெண்கள் ஈடுபடும் மாநிலம் தமிழ்நாடு: ஐகோர்ட் நீதிபதி பேச்சு
- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
- அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார். இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன். இந்த ஐகோர்ட்டில் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். என் பணியை முழு திருப்தியுடன் செய்துள்ளேன் என்ற மன நிம்மதியுடன் விடை பெறுகிறேன்.
தமிழ்நாடு உயர்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வக்கீல் தொழிலுக்கு அதிக அளவில் பெண்கள் வருகின்றனர். அண்மையில்கூட நீதிபதிகள் தேர்வில் 213 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 135 பெண்கள் தேர்வாயுள்ளனர். அந்த அளவுக்கு அருமையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.
இதில் ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.