தமிழ்நாடு செய்திகள்

கட்டுமான அதிபர் வீட்டில் பதுக்கல்: ரூ.9 கோடிக்கு கட்டு கட்டாக போலி ரூபாய் நோட்டு குவியல்

Published On 2025-02-06 14:56 IST   |   Update On 2025-02-06 14:56:00 IST
  • ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன.
  • அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள்.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் கட்டுமான தொழில் செய்து வந்த யாகூப் என்பவர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகளும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். தொழில் அதிபர் யாகூப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் ரூபாய் நோட்டு கட்டுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. கட்டுகட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றி பார்த்த போது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

ரூபாய் நோட்டுகளை போலவே டம்மியான நோட்டுகள் அச்சடித்து கட்டுகட்டாக வைக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளை போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன. அதனை அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள். ரூ.9 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.

இது அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளோடு போலி நோட்டுகளை சேர்த்து புழக்கத்தில் விட வைத்திருந்தாரா? கட்டுமான தொழில் ரீதியாக பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு இதுபோன்ற டம்மி நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாரா? எதற்காக போலி நோட்டுகள் தயாரித்து வைத்திருந்தார் என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

Similar News