தேவாலயங்கள்- பள்ளிவாசல்- தர்காக்களை புதுப்பிக்க ரூ.3.65 கோடிக்கான காசோலை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- முதல் தவணைத் தொகையாக 77 லட்சத்து 60 ஆயிரத்து 8 ரூபாய்க்கான காசோலையை இம்மானுவேல் தாசனிடம் வழங்கினார்.
- 35 கிறித்துவ தேவாலயங்களுக்கு புனரமைப்புப் பணிகளுக்காக 1.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ் நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல், பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களுக்கு புதிதாகச் சுற்றுச்சுவர், பாதை அமைத்தல், புனர மைத்தல் பணிகளை மேற் கொள்ள அரசு நிதி உதவி வழங்கும் திட்டங்களின் கீழ் 3 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரத்து 208 ரூபாக்கான காசோலைகளை தேவாலயங்கள் மற்றும் தர்காக்களின் நிர்வாகிகளிடமும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் செயல்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் திருத்தலத்தினை புனரமைக்க 1.55 கோடி ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, அதில் முதல் தவணைத் தொகையாக 77 லட்சத்து 60 ஆயிரத்து 8 ரூபாய்க்கான காசோலையை இம்மானுவேல் தாசனிடம் வழங்கினார்.
லால்குடியில் செயல்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் தேவாலயம் மற்றும் சென்னை மாவட்டம், அயனாவரத்தில் செயல்பட்டு வரும் நல்மேய்ப்பர் லுத்தரன் திருச்சபை ஆகிய இரு தேவாலயங்களை புனர
மைக்க ஒரு தேவாலயத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக ஒரு தேவாலயத்திற்கு தலா 15 லட்சம் வீதம் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை களை அடைக்கலராஜ் மற்றும் போதகர் ஸ்டான்லி ஜோசப் ஆகியோரிடம் வழங்கினார்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ், 7 தேவாலயங்களுக்கு 12.90 கோடி ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக (50 சதவீதம்) 6.45 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 35 கிறித்துவ தேவாலயங்களுக்கு புனரமைப்புப் பணிகளுக்காக 1.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் முத்துப்பேட்டை, ஹஸ்ரத் ஷேக் தாவூத் காமில் வலியுல்லாஹ் தர்காவிற்கு 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக 58 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பாக்கர் அலியிடம் வழங்கினார்.
இவை உள்பட மொத்தம் 2 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
புரசை வாக்கத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணைத் தொகையாக 23 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதகர் மற்றும் குழு தலைவர் டாக்டர் ஜேகோப் சுந்தர் சிங் மற்றும் கல்லறைத் தோட்ட பொறுப்பாளர் பி.ஜெ.பி. கமலாரஞ்ஜனி டமும் வழங்கினார்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து சான்றிதழ்கள் பெற்ற நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.