தமிழ்நாட்டில் மின்சார ஆட்டோ, கார்களுக்கு 500 இடங்களில் சார்ஜிங் மையங்கள்- மின்வாரிய அதிகாரிகள் தகவல்
- பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை வெளியிட்டது. இதன்படி மின்வாகன உற்பத்தி துறையில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி மின்சார வாகனங்களுக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளை இந்த ஆண்டு இறுதிவரை வழங்க அனுமதிக்கப்பட்டது.
மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தனிநபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பஸ்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இன்னும் புதிய பஸ்கள் வர இருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேக குறைதீர் மையங்களும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.