தமிழ்நாடு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

Published On 2025-06-08 11:57 IST   |   Update On 2025-06-08 11:57:00 IST
  • பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
  • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மதுரை:

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து இன்று காலை 11.15 மணியளவில் அவர் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக  சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் புறப்பட்ட மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்து கொண்டு அமித்ஷா மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். இதையொட்டி மற்ற கோபுரங்கள் வழியாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் போலீசார் ஏறி நின்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அதேபோல் கோவிலை சுற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கோவில் வளாகத்தில் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News