தமிழ்நாடு செய்திகள்

சி.பி.சி.ஐ.டி. விசாரணை: காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் நீடிக்கும் மர்மம்

Published On 2025-09-10 12:22 IST   |   Update On 2025-09-10 12:22:00 IST
  • உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
  • கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

தொடர்ந்து அவர் அதே மாதத்தில் 4-ந்தேதி அவரது பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பி மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் சிமெண்ட் கல் கட்டப்பட்டிருந்ததாகவும், வாயில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனக்கு பணம் தர வேண்டிய நபர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு 'மரண வாக்குமூலம்' மற்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததார்.

அந்த கடிதத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

ஆனால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை சம்பவ இடங்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் இதுவரை போலீசாரால் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எவ்வித பயனுள்ள தடயங்களையும் அளிக்கவில்லை. இதனால், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற மறைமுக ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை நீடித்து வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஜெயக்குமார் மரணத்தை சுற்றியுள்ள மர்மம் நீடிக்கிறது. அவரது குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், ஜெயக்குமாரின் கொலை வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மீது எங்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், ஜெயக்குமார் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று சுருக்கமாக தெரிவித்து முடித்து விடுகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தின் மர்மம் சுமார் 500 நாட்களாகியும் இதுவரை விலகாமல் உள்ளது.

Tags:    

Similar News