தமிழ்நாடு செய்திகள்

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

Published On 2025-06-06 13:01 IST   |   Update On 2025-06-06 13:01:00 IST
  • மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
  • 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும்.

சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் இன்று வழங்கியது. அதில், நீட் மறுதேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்தது.

22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ள நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும் எனவும், மாணவர்களின் வழக்கு தகுதியானதாக இல்லை என்றும் கூறி வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.   

Tags:    

Similar News