தமிழ்நாடு செய்திகள்

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2025-10-07 14:50 IST   |   Update On 2025-10-07 14:50:00 IST
  • 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
  • படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகர ணங்களை பறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகானந்தம் (38), அருண் (27) ஆகிய 6 மீனவர்களும், நாகை நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ் (19) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், எஞ்ஜீன், செல்போன், ஜி.பி.எஸ். கருவி, லைட் பேட்டரி, வாக்கி-டாக்கி, 500 கிலோ மீன் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பு உபகரணங்களை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசங்கர் என்பவர் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News