தமிழ்நாடு செய்திகள்

நடிகர் ஸ்ரீகாந்த் மீது 4 பிரிவுகளில் வழக்கு : அபராதம்-சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

Published On 2025-06-24 14:46 IST   |   Update On 2025-06-24 14:46:00 IST
  • நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா்.
  • நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரது மகனுக்கும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாத் என்பவருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது.

அப்போது பிரசாத்துடன் வந்த சில தொழில் அதிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். மது பாரையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். டி.எஸ்.பி. மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாரில் ரகளையில் ஈடுபட்டதாக பிரசாத், அஜய் ரோகன், தூண்டில் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கும், கொகைன் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனால் உஷாரான நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் கொகைன் போதைப்பொருளை ஒரு கும்பல் சப்ளை செய்து இருப்பதும் அதில் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் பிரசாத் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரை போலீசாா் தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனா். விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் இருப்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப் குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் பிரதீப்குமாா் குறித்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜானையும் கடந்த 19-ந்தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.

இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீசாா் விசாரணை செய்தனா். அப்போது பெங்களூரில் வசிக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த நைஜீரியாவின் ஜூரிக், சென்னையில் உள்ள போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு கொகைனை விற்று உள்ளாா்.

இந்தக் கும்பலிடம் இருந்து பிரதீப்குமார் கொகைனை கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாங்கி வந்து சென்னையில் விற்று வந்துள்ளாா். ஒரு கிராம் கொகைனை அவர் ரூ.7 ஆயிரம் கொடுத்து வாங்கினார். அதை சென்னையில் ரூ.13 ஆயிரத்துக்கு விற்றுள்ளாா்.

அவர் மூலம் பல தடவை பிரசாத் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி உள்ளார். பிரசாத் "தீங்கிரை" என்ற சினிமா படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீகாந்துக்கும், பிரசாத்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

அந்த நட்பு காரணமாக பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் பழக்கம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பரவியது. இருவரும் வாட்ஸ்அப் மூலம் கொகைன் பயன்படுத்துவதை பற்றி பல தடவை பேசியுள்ளனர். நாளுக்கு நாள் கொகைன் பயன்படுத்துவதை நடிகர் ஸ்ரீகாந்த் அதிகரித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கொகைகனுக்கு அடிமையாகி விட்டதாகவே கூறப்படுகிறது.

இதனால் பிரசாத்திடம் இருந்து மட்டுமின்றி நேரடியாக பிரதீப்குமாரிடமும் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் வாங்க தொடங்கி உள்ளார். கொகைன் வாங்குவதற்கு ஜிபே மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். ஒரு கிராம் கொகைனை ரூ.13 ஆயிரத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் மட்டும் அவர் ரூ.5 லட்சம் செலவு செய்து இருக்கிறார். அப்படி வாங்கிய கொகைனை திரை உலக பிரபலங்கள் பலருக்கும் ஸ்ரீகாந்த் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே போலீசார் பிரதீப்குமாரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது நடிகர் ஸ்ரீகாந்த் கணக்கில் இருந்து அவருக்கு ஆயிரக்கணக்கில் பணம் வந்திருப்பதை கண்டனர். இது தொடர்பாக விசாரித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி பிரதீப்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் போதைப் பொருள் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ஸ்ரீகாந்துக்கு போலீசாா் அழைப்பாணை வழங்கினா். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானாா். அவரிடம் விசாரித்தபோது, தான் கொகைனை வாங்கவில்லை என்று முதலில் மறுத்தாா். நேற்று காலை நீண்ட நேரம் போலீசார் அவரிடம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், கொகைன் மற்றும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடா்புகளை ஸ்ரீகாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனா்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீசாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து 7 கொகைன் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ஒன்று:- 8சி (போதைப் பொருள் பயன்படுத்துவது மற்றும் கடத்தி விற்பது)

இரண்டு:- 22 (போதைப் பொருள் பதுக்கி வைப்பது)

மூன்று:- 29(1) (போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சதி செய்தது)

நான்கு:- 27 (போதைப் பொருளை கூட்டாக கடத்துவது)

இந்த 4 பிரிவுகளின் கீழ் தொடரப்படும் வழக்குகளை தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் எந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தினார்களோ அல்லது பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவதாக தெரிகிறது.

சமீபத்தில் 2 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு சென்னை கோர்ட்டு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத் தப்பட்டது. அதன் பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உடல்நலம் பற்றி போலீசார் ஆய்வு செய்து அறிக்கை பெற்றனர். இதைத் தொடர்ந்து 10 மணி நேர விசாரணைக்கு பிறகு ஸ்ரீகாந்த் எழும்பூர் 14-வது நீதித்துறை நடுவர் மன் றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை ஜூலை 7-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார். அப்போது ஸ்ரீகாந்த் தரப்பு வக்கீல் நீதிபதியிடம், "ஸ்ரீகாந்த் முறையாக வருமான வரி செலுத்தி வருவதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் ஸ்ரீகாந்திடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனு தயார் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் அவரிடம் 3 கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1. ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தாரா?

2. திரையுலக விருந்துகளில் பங்கேற்ற நடிகர்-நடிகைகளுக்கு கொகைன் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நடிகர்-நடிகைகள் யார்?

3. கொகைன் போதைப் பொருள் மூலம் ஸ்ரீகாந்த் மிகப்பெரிய நெட்வொர்க்குக்கு உதவி செய்தாரா? ஆகிய 3 கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும் ஸ்ரீகாந்துக்கு நெருக்கமான நடிகர் கிருஷ்ணா உள்பட மற்ற நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் ஸ்ரீகாந்த்துடன் தொடர்பில் இருந்த நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை அவரது தேவைக்கு மட்டும் வாங்கினாரா அல்லது வேறு யாருக்கும் வாங்கிக் கொடுத்தாரா என போலீசாா் விசாரித்துள்ளனர்.

நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா். மிகவும் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News