தமிழ்நாட்டை தொடர்ந்து பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் : முதலமைச்சர் பகவந்த் மான்
- பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உணவருந்தினர்.
இதனை தொடர்ந்து காலை உணவுத் திட்ட விரிவாக்க விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "பஞ்சாபில் நாளை நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பானது. மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்ல விஷயம்" என்று தெரிவித்தார்.