டாக்டர் ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- சென்னை மாநகர போலீசார் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளைப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம நபர் ஒருவர் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு, சென்னை ஐகோர்டு, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் என பிரபலங்களின் வீடுகளுக்கும் முக்கிய இடங்களுக்கும் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளைப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் வீட்டில் குண்டு வைக்கப் பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள அன்புமணியின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னாள் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று இரவு மட்டும் சென்னையில் கவர்னர் மாளிகை, அண்ணா சாலையில் உள்ள தர்கா, (தூதரக அலுவலகங்கள் என சுமார் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுருக்கிறது, இந்த மிரட்டல் பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். பரபரப்பான அண்ணா சாலையில் உள்ள தர்காவிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இப்படி தொடர்ச்சியாக போலீசாரை அலைக்கழித்து வரும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் எங்கு இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.