தமிழ்நாடு செய்திகள்

அமைச்சரின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பாஜக பயப்படாது- அண்ணாமலை

Published On 2024-12-07 12:05 IST   |   Update On 2024-12-07 12:05:00 IST
  • தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
  • அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதானியை சந்திக்கவே இல்லை, இந்த விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.

திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை வழக்கு தொடருவோம் என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமின் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.

மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் ஜாமின் அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021 ஆம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.

அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், ரூ.205 கோடி தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமின் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது. எந்த அடிப்படையில் ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்? என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News