தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை வேண்டும்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... பரமக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Published On 2025-04-02 11:42 IST   |   Update On 2025-04-02 11:42:00 IST
  • எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
  • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.

இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

இதையடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் என்று பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News