மதுரை காந்தி மியூசியத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு பா.ஜ.க.வினர் காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு
- பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர்.
மதுரை:
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்த வந்த கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இது குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது:-
மகாத்மா திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை, கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கதர் ஆடையும், பா.ஜ.க.வினர் காவித் துண்டும் அணிவித்தனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம் என்றார்.