பா.ஜ.க. பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு: அமித்ஷா நாளை நெல்லை வருகை
- மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
- உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. கட்சி இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாகவும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பா.ஜ.க. கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழ்நாடு முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது.
இதன் முதல் மாநாடு நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 8,595 பூத் கமிட்டிகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன் முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார்.
மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மக்களுக்கு அளித்த எண்ணற்ற மக்கள நலத்திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்து விரிவாக பேச உள்ளார்.
மேலும், ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்குகளை பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியும், வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையை காட்டி பேசுவார் என நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதோடு, சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித்ஷாவை வரவேற்று நெல்லை மாநகரில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.