ராணிப்பேட்டை அருகே பைக் - கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
- கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
- விபத்தில் காயமடைந்தவர்கள் இளைஞர்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காரைகாட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் தினேஷ் (வயது 20). வேலூர் ரங்காபுரம் ஏகாம்பர தெருவை சேர்ந்த அல்லாபக்சா மகன் ஷாஜகான் (26). ஆற்காடு காந்திநகரை சேர்ந்த தமிழரசன் மகன் பாலமுருகன் (19).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாவில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை நாவல்பூர் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் வந்த தினேஷ், ஷாஜகான், பாலமுருகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான், பாலமுருகன் ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஷாஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பாலமுருகனும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான 3 வாலிபர்கள் விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.