குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
- கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் 20-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கரைகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சேதமடைந்தன.
பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவுற்றதால் இன்று காலை முதல் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் சாலைகளில் ஏற்பட்ட மண் அரிப்புகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக சீரமைத்த பிறகே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை குற்றாலம் பகுதியில் நீடிக்கிறது.
விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.