கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.1½ லட்சம் லஞ்சம் - உதவி ஆணையர் கைது
- நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.
கோவை:
கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.
இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.
அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.
அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.
அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.
பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.