தமிழ்நாடு செய்திகள்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை- கைதான வடமாநில வாலிபரிடம் விடிய விடிய விசாரணை

Published On 2025-07-26 08:02 IST   |   Update On 2025-07-26 08:02:00 IST
  • தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.
  • வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த 8 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வடமாநில வாலிபர் சிறுமி வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குற்றவாளியை கண்டுபிடிக்க அவரது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் பொது இடங்களில் போஸ்டராக ஓட்டினர். குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி எனவும் போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை சம்பவத்தில் தொடர்புடைய மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரெயில் நிலையம் அருகே கைது செய்தனர். அந்த நபரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்து உள்ளார். வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை) அந்த வாலிபர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது.

அந்த வாலிபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பாக்கத்தில் வைத்து விசாரித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.

அந்த வடமாநில வாலிபரிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வாலிபரை மகிளா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News